கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி வளமாக இருந்தார்களோ, அதே அளவிற்கு தி.மு.க.வினரையும் எடப்பாடி பழனிசாமி ‘கவனித்தது’ குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால், ‘எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம்-…’ என தற்போது அமைச்சராக இருப்பவர்கள் முதல் தி.மு.க.வின் கிளைக்கழக நிர்வாகிகள் வரை மனதில் பட்டதை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க.விற்கு ‘கைமாறாக’ தி.மு.க. அமைச்சர்கள் பண உதவியை தவிர்த்து பொருளதவி மற்றும் வேறுமாதிரியான உதவிகளை தாராளமாக செய்து வருகிறார்களாம்.

மதுரை மாநாட்டிற்கு தி.மு.க. அமைச்சர்கள் உதவிக்கரம் நீட்டுவது தொடர்பாக ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது, மு.க.ஸ்டாலினைத் தவிர தி.மு.க. ‘மாஜி’க்களும், தி.மு.க. கிளைக்கழக நிர்வாகிகள் வரை பலனடைந்தனர். இன்னும் சொல்லப்போனால், தற்போது கூட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஏன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட பெரிதாக சம்பாதிக்க வில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், அனைவரும் மன (பண) நிம்மதியாக இருந்தனர்.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வின் மாஜிக்கள் சிலர் தி.மு.க. அமைச்சர்களிடம் சில உதவிகளை கேட்டனர். அதற்கு உடனடியாக அமைச்சர்கள் பொருளதவி செய்து, அ.தி.மு.க.வின் மாநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர். இந்த தகவல் உளவுத்துறை மூலம் முதல்வருக்கும் எட்டியிருக்கிறது’’ என்றனர்.

இதுநாள் வரை ‘பங்கு போடுவதில்’ கூட்டாக இருந்தனர். தற்போது, ‘உதவிக்கரம்’ நீட்டுவதிலும் இணைந்திருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal