ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தினார். இதற்கு பதில் அளித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, நாள்தோ றும் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த தி.மு.க.வின் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடு படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடி ஆட்சியில்தான்.

1967-ம் ஆண்டிலிருந்து 6 முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் பல முறை மந்திரி பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை. மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964-ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி பற்றி ஞாபகம் வராதது அதிசயமே.

பிரதமர் நரேந்திர மோடி , மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிசான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.72,820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டு உள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம் என கூறியதை நிறைவேற்றினீர்களா? பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும். மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது தி.மு.க.வுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal