தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவரை நியமிப்பது வழக்கம் என்றாலும், அவரது தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். இதனால் கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல பெயர் இருந்து வருகிறது.

இந்நிலையில், தலைவர் பதவியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நீடித்து வருவதால் அந்த பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் பலர் அவரை மாற்ற வேண்டும் என்று டெல்லி மேலிடத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பேசும் போது கூட, ‘நான் பல ஆண்டுகளாக தலைவராக இருக்கிறேன், புதிய தலைவரை நியமித்தால் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டார். எனவே, அவ்வப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்ற பரபரப்பு எழுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோன்று கடந்த சில நாட்களாக கே.எஸ்.அழகிரி மாற்றம் என்ற செய்தி தமிழ்நாடு காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் இப்போது வருகிறார், அப்போது வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் டெல்லி மேலிடமோ இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஒன்று அவரை மாற்றி புதிய தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அல்லது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அவரையே அதுவரை தலைவர் பதவியில் நீடிப்பார் என்ற அறிவிப்பையாவது வெளியிட வேண்டும். அப்போது தேர்தல் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனாலுல் டெல்லி மேலிடமோ ஒரு முடிவை எடுத்து அறிவிக்காமல் ரகசியம் காத்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவது ஒரு புறம் என்றால், தலைவர் பதவிக்கு போட்டியில் உள்ள சிலர் தன்னை தான் அறிவிப்பார்கள் என்று வெளிப்படையாக பேசி வருவது காங்கிரசார் மத்தியில் உசுப்பேற்றி வருகிறது. இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது.

இந்த சூழ்நிலையில், தலைவரை மாற்றினால் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை தொடங்குவது என்பது சாத்தியமற்றது என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. எனவே, தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியை தேர்தல் நேரத்தில் மாற்றும் முடிவை டெல்லி மேலிடம் எடுத்தால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் பின்னடைவு ஏற்படும் என்பதால், அவரை மாற்றும் முடிவை மேலிடம் எடுத்திருந்தால் அதை தற்போது கைவிட கோரி மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், விஜய் வசந்த் மற்றும் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முனிரத்தினம், அசன் மவுலானா உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள், 30 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் இன்று மாலை பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்திக்கின்றனர். இதற்கான நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அகில இந்திய தலைவருடனான இந்த சந்திப்பின் போது, ‘தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்றினால் கட்சியில் குழப்பம் தான் நீடிக்கும். தேர்தல் பணிகளிலும் சுனக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே அவரை மாற்றும் முடிவு இருந்தால் அதை கைவிட வேண்டும்’’ என்றும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாலை 6 மணி அளவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal