பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை இதுவாகவே இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10ஆவது முறையாக தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் எழுச்சி மற்றும் வளர்ச்சியின் விளைவாக நாட்டின் மீதான உலகளாவிய நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது – இவை மூன்றும் சேர்ந்து தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்பொழுது நாம் அம்ரித் கால் என்ற உன்னதமான நிலையை பார்த்து வருகிறோம் நாம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும்.” என்றார்.

மேலும், “இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது. இளைஞர்கள்தான் நமது நாட்டின் வளர்ச்சியை வழி நடத்திச்செல்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய திறன் நம்பிக்கை – அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, நாட்டின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் இந்தியாவின் மீது உலகின் நம்பிக்கை. “என்றும் பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிலையில், செங்கோட்டையில் நடைபெறும் இன்றைய சுதந்திர தின விழாவில் இடம்பெறும் உரைதான் பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் எனவும், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவி வீழ்த்தும் எனவும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance – இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal