நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக நாட்டில் அடுத்த மாதம் முதல் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். மணிப்பூர் மாநில வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும். மணிப்பூர் மாநில மக்களுடன் நாம் அனைவரும் இருக்கிறோம்.

உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. நாட்டில் தற்போது எடுத்து வரும் தாக்கம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இருக்கும். பெண்கள், இளைஞர்களின் சக்தியே இந்தியாவின் மிகப்பெரிய பலம். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளங்களை கொள்ளையடித்தனர். தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் நமது கவனம் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம்தான் நமது சக்தியின் காரணம்.

நாட்டின் மக்கள் தொகையும் நமது சக்திக்கு காரணமாகும். நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் எந்த வித தடுமாற்றம் எதுவுமில்லை. நமது பயணத்தில் பாதை விலகல் கிடையாது. 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் இருக்கின்ற நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே இந்தியாவில் தான் 30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் தான் நம் நாட்டினுடைய வளர்ச்சியை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.

இந்திய நாட்டின் வளர்ச்சியை வழிநடத்துவது இளைஞர்கள் தான்.. தொழில் நுட்ப புரட்சியில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை உலகநாடுகள் தெரிந்துகொள்ள விரும்புகின்றன. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

அதாவது, பாரம்பரிய திறமைகள் கொண்ட நபர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். 15 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும்’’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal