பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார்.

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். “அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்” என குறிப்பிட்டார்.போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், “கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal