மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை உடனே செயல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் குன்றத்தூர் கோவூர் அருகே பெரிய பணிச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். அங்கு கலைஞர் படிப்பகமும் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் உருவச்சிலையை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பெரிய பணிச்சேரியில் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவுருவச் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் குன்றத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம் வரவேற்று பேசுகிறார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், கழக தீர்மானக்குழு செயலாளர் மீ.அ. வைத்தியலிங்கம், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், மற்றும் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி கழக செயலாளர்கள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு நன்றியுரை கூறுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் வரவேற்பும் கொடுக்க உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.