ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அன்வர்ராஜா இணைந்தார். இந்த நிலையில்தான் திருச்சியில் அ.ம.மு.க.வில் இருந்து விலகியிருக்கும் துரை செல்வமோகன் அ.தி.மு.க.வில் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது பற்றி திருச்சியில் உள்ள நடுநிலையான அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியில் தி.மு.க. & அ.தி.மு.க. இரு கட்சிகளுக்குள்ளும் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க.. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் கோஷ்டிப் பூசல் அடிதடியாக வெடித்தாலும், அவ்வப்போது அமைதியாகிவிடுவார்கள். அ.தி.மு.க.வில்தான் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் அண்ணன் மகன் துரை செல்வமோகன் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் ‘கறைபடியாத கட்சிக்காரர்’ என பெயரெடுத்தவர் என்.செல்வராஜ் என்பது எல்லோருக்கும் தெரியும். இவரது வழியில் அரசியல் பயணம் செய்த துரை செல்வமோகன், தி.மு.க.வில் இருந்த போது மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்.
அதன் பிறகு என்.செல்வராஜ் அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணையும்போது துரை செல்வமோகனும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அடுத்து, அ.ம.மு.க.வில் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளாராக சிறப்பாக பணியாற்றினார். லால்குடி தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் பெரம்பலூர் தொகுதியில் துரை செல்வமோகனை களமிறக்கலாம் என டி.டி.வி.தினகரன் முடிவு செய்தார். காரணம், இவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. இவர் போட்டியிட்டால் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடலாம் என டி.டி.வி.தினகரன் கணக்குப் போட்டார். ஆனால், துரை செல்வமோகன் போட்டியிட மறுத்துவிட்டார்.
இந்த நிலையில்தான் அ.ம.மு.க.விலிருந்து தற்போது விலகியிருக்கும் துரை செல்வமோகன் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிகிறது. இவரைப் போன்ற துடிப்பான இளைஞர்கள்தான் திருச்சி மாவட்ட அ.தி.மு.க.விற்கு தேவை. ஏனென்றால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது திருச்சி அ.தி.மு.க.வின் கோட்யை£க இருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு, கே.என்.நேரு திருச்சியை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிவிட்டார்.
காரணம், திருச்சி அ.தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் ஏராளம், தாராளம்! எனவே, எந்தவொரு கோஷ்டியையும் சாராத, அவப் பெயர் ஏதும் இல்லாத துரை செல்வமோகன் போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்தால், அக்கட்சிக்கு தீவிரமாக பணியாற்றுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு இவரைப் போன்றவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி இவரைப் போன்ற இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்து ஊக்குவிக்கவேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் கருத்து’’ என்றனர்.
திருச்சி மாவட்டத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் முத்தரையர் சமுதாயத்தினர். அந்த சமுதயாத்தைச் சேர்ந்த துரை செல்வமோகனை அ.தி.மு.க.வில் இணைத்து, தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பாரா எடப்பாடி பழனிசாமி..?