2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கும வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கர்நாடகா, கேரளா மாநில காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தி முடிந்த நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் 27 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் மற்றும் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதால் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கார்கே கேட்டுக்கொண்டார். இதற்காக பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் சீரமைக்க வேண்டும் என்று கார்கே கேட்டுக்கொண்டார். புதிய நிர்வாகிகளை நியமித்து, புதிய வியூகங்களை வகுத்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ராகுல்காந்தி பேசுகையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை பார்த்து அவர் உங்கள் மாநிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு காங்கிரஸ் வாக்குகள் குறைந்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து மேலிட தலைவர்களுடன் தமிழக காங்கிரசார் விவாதித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-7. ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்தனர். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருந்தது. இந்தியாவிலேயே சிறந்த கூட்டணி தமிழகத்தில் உள்ளது. அந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என அறிவுரை வழங்கினர். ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியை தடுக்க முயலும் பா.ஜ.க.வின் முயற்சியை தகர்க்கும் வகையில் தேர்தலை எதிர்கொள்வது, பரப்புரையை எந்த வகையில் மேற்கொள்வது, செய்த சாதனைகளை எடுத்துரைப்பது ஆகியவை தொடர்பாக கூட்டத்தில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகளையும் திறம்பட கையாண்டு தேர்தலில் வெற்றி பெறுவது தான் நோக்கமாக இருந்தது. தமிழகத்தில் கட்சியின் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் மாநாட்டையும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவர்கள் மாநாட்டையும் நடத்தி, இறுதியாக மாநில மாநாடு நடத்தவும், இந்த நிகழ்வுகளுக்கு தலைவர்கள் ராகுல் காந்தியும், கார்கேவும், நேரில் வரவும் கோரிக்கை வைத்தேன்.இவ்வாறு செய்தால் இயக்கம் மேலும் வலுவடையும் என்றும் கூட்டதில் யோசனை வைத்தேன்.
அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கொடியை பறக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் செய்வதாகக் கூறிக்கொண்டு வாகனத்தில் செல்கிறார். அது நடைப்பயணம் அல்ல, சொகுசுப் பயணம், தமிழகத்தில் பா.ஜ.க. காகிதப் புலியாகத்தான் உள்ளது. மக்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை. வேட்பாளர் தேர்வு குறித்து பேசப்பட்டதா என்று கேட்டதற்கு அதை காங்கிரஸ் மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்றார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. அதை காங்கிரஸ் மேலிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கூட்டத்தில் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.