‘திருச்சி என்றாலே முன்னாள் அரசு கொறடா மனோகரன்தான்!’ என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி புகழாரம் சூட்டியதுதான் மலைக்கோட்டை ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழத்தியிருக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் ஆகஸ்டு 20ந்தேதி நடக்கும் ‘பொன்விழா’ எழுச்சி மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் கடந்த 1&ந்தேதி திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் இரா.விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மூத்த நிர்வாகியான கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது திருச்சி மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர் முன்னாள் அரசு கொறடா மனோகரன்’’ என்றார். அப்போது, ரத்தத்தின் ரத்தங்களில் விசில் சத்தம் விண்ணைத் தொட்டது. திருச்சி அ.தி.மு.க.விற்கு மனோகரன் மீண்டும் வந்தது, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது இந்தக் கூட்டம்.

இது பற்றி திருச்சியில் எந்த கோஷ்டியையும் சாராத அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

‘‘சார், திருச்சி அ.தி.மு.க.வைப் பொறுத்தளவிற்கு கோஷ்டிப் பூசல் தலைவிரிதாடும்! ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது திருச்சி மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த மனோகரன் அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி அம்மாவின் குட் புக்கில் இடம் பெற்றிருந்தார். அம்மாவின் மறைவிற்குப் பிறகு திருச்சி அ.தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது.

திருச்சியில் பெரும்பாலான சமுதாயமாக இருக்கும் முத்தரையர் சமுதாயத்திலேயே கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கும். ஆனால், ஆர்.மனோகரன் மாவட்டச் செயலாளராக இருக்கும் போது, அனைத்து சமுதாயத்தினரையும் அரவனைத்துச் சென்றார். இந்த விபரம் எல்லாம் அறிந்து வைத்திருந்த கே.பி.முனுசாமி, மனோகரனை மனதார பாராட்டியிருக்கிறார்.

இது சில எதிர்கோஷ்டிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மற்றபடி மனோகரனைப் பொறுத்தளவில் கட்சியின் சீனியர் நிர்வாகி, நெளிவு, சுழிவுகளை அறிந்து ரத்தத்தின் ரத்தங்களை வழிநடத்திச் செல்பவர். உண்மையிலயே மலைக்கோட்டை ரத்தத்தின் ரத்தங்கள் மனோகரன் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்’’ என்று முடித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal