அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில்தான் அன்வர் ராஜா கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதிமுகவின் தோல்விக்கு பாஜக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளும்தான் காரணம் என்று எடப்பாடியை அன்வர் ராஜா வெளிப்படையாக தாக்கினார்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமைப்பண்பு சரியில்லை. அவரின் கூட்டணி முடிவுகளில் தவறு செய்துவிட்டார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் சறுக்கிவிட்டார். பாஜகவிற்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். சசிகலாதான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அன்வர் ராஜா பல இடங்களில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தேர்தலில் வென்று இருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று கூறி இருப்பார். அவர் வலுவான தலைவராக இல்லை. சசிகலா மீண்டும் வர வேண்டும். சசிகலா காலில் விழுந்தவர்கள் அவரை ஏன் ஏற்க தயங்குகிறார்கள் என்றெல்லாம் அன்வர் ராஜா பேசினார். இதை எல்லாம் காரணம் காட்டித்தான் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாலும், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசியதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.

இப்படி எல்லாம் பேசிவிட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி உள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அன்வர் ராஜாவை ஏற்றுக்கொண்டதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மீது தற்போது சிறுபாண்மையினர், முக்கியமாக இஸ்லாமியர்கள் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 17 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன.

ஆனால் இந்த வாக்குகளில் பெரும்பாலானவை கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. திமுகவின் வெற்றிக்கும் இந்த வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்து கொண்டே வருகின்றனர். இதற்கு இடையில் அன்வர் ராஜாவும் நீக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் மேலும் அப்செட் ஆனார்கள்.

இந்த நிலையில்தான் இஸ்லாமியரை சமாதானப்படுத்தும் விதமாக மீண்டும் அன்வர் ராஜாவை உள்ளே இழுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவோட கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினரை தாஜா செய்ய எடப்பாடி பிளான் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் பாருங்கள் அன்வர் ராஜா மீண்டும் எங்களிடம் வந்துவிட்டார் என்பதை காட்டும் விதமாக அன்வர் ராஜாவை உள்ளே இழுத்து இருக்கிறார்.

இதை உறுதி செய்யும் விதமாக அன்வர் ராஜா பேட்டி அளித்துள்ளார். அதில், சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். லோக்சபா தேர்தலில் பாஜகவிற்காக வாக்கு கேட்பேன். அரசியலில் விமர்சனங்கள் என்பது அனுமதிக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் நான் வாக்கு சேகரிப்பேன். காங்கிரஸ் கட்சியை தவிர பாஜக உடன் அனைவரும் கூட்டணி வைத்துள்ளனர். விலகி இருந்தாலும் அதிமுகவினர் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இடையில் சின்ன சறுக்கல்தான் ஏற்பட்டது, என்று கூறி உள்ளார்.

அன்வர்ராஜாவை அ.தி.மு.க.வில் வளைத்துப் போட்டதற்கு முக்கிய காரணம் என்ன என அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்திற்கு யாத்திரையை தொடங்கி வைக்க அமித் ஷா வந்தார். அப்போது, ராமநாதபுரத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் சிலரிடம் பேசினார். ஒருவேளை பிரதமர் மோடி இங்கு போட்டியிட்டால் முஸ்லிம் வாக்குகள் உங்களுக்குத்தான் என அப்போது சில தலைவர்கள் உறுதியளித்தனர்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் ‘ராமநாதபுரத்தில் உள்ள முஸ்லிம் வாக்குகளை அப்படியே நம் கூட்டணி பெறவேண்டும்’ என அன்பு கட்டளையிட்டியிருக்கிறார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்திருக்கிறார். இதன் மூலம் டெல்லி மேலிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal