குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கலைஞர் உரிமை தொகை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில், “திமுக அரசு, மகளிர் உரிமைத்தொகை தருவதற்காக ஒவ்வொரு காவல் நிலையமும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் மூலம் ரூ.1 லட்சம் வசூலித்து தர வேண்டும் என்று கட்டாய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மறைமுகமாக உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக இருக்கவும்” என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. மேலும், சில செய்தித்தாள்களும் இதுகுறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை தொடர்பாக காவல்துறை மீது வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் உரிமை தொடகி நிதி திரட்ட ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசோ, காவல்துறையோ எந்த உத்தரவையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை. இதுபோன்று பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், ஆதி திராவிடர் நலத்துறைக்கான சிறப்பு நிதியை, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதுகுறித்து விளக்கமும் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal