கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

அதன் ஒரு கட்டமாக, தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர்,, சின்னம்பள்ளி, பி.அக்ரகாரம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்து அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். சாலை மறியல் போராட்டங்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், அணி, துணை, பொறுப்பாளர்களும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal