கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறது என தமிழகத்தில் உள்ள இருபெரும் கட்சிகளான தி.மு.க. & அ.தி.மு.க. இரண்டுமே காத்திருக்கும். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘பழம் நழுவி பாலில் விழவேண்டும்’ என விஜயகாந்திற்கு மறைமுகமாக 2011&ல் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான் இன்றைக்கு தே.மு.தி.க.வின் அதலபாதாளத்திற்கு போய்விட்டது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளின் கூட்டணியிலும் இடம் பெற அதுவும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய கட்சியாக இருப்பது தேமுதிகதான். இந்த போக்கினாலேயே ஒவ்வொரு தேர்தலின் போது நிராதரவு நிலையில் நடுவீதியில் தேமுதிக கைவிடப்படுகிற போக்கும் இருந்து வருகிறது.

அதிமுக- பாஜகவுடன் இணக்கமாகத்தான் இருந்து வந்தது தேமுதிக. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. தேமுதிகவை விட மிகவும் சிறிய கட்சிகளைக் கூட டெல்லி பாஜக மேலிடம் அழைத்திருந்தது. இது தேமுதிகவுக்கு மிகப் பெரிய அரசியல் பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது.

அதேநேரத்தில், நாங்கதான் கூட்டணியிலேயே இல்லை. எங்களை எப்படி அழைப்பாங்க என வழக்கம் போல வசனம் பேசியது தேமுதிக தலைமை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் நாங்கள் இல்லவே இல்லை. தேர்தலின் போது யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர்தான் தெரிவித்திருந்தார். இதனால் பாஜக அணியில் தேமுதிக இனி இடம்பெறக் கூடிய சாத்தியமும் இல்லை என்றே உறுதியாகி இருந்தது.

இதனையடுத்து உடனடியாக திமுக கூட்டணிக்கு தாவித்தான் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது தேமுதிக தலைமை. இதனை உணர்ந்து கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தைகள், தூது படலங்களையும் தேமுதிக தலைமை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் தொடக்க விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் என சொல்லப்படுகிற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் புதிய திருப்பமாக, அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்த்ள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal