அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆகியோர் ஆகஸ்டு 1&ந்தேதி 1 மணி நேரத்திற்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஜூன் 21ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது. நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன், ‘‘கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு தடை கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்டடியில் எடுக்க வேண்டியது அவசியம், ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல” எனத் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை எப்போது காவலில் எடுப்பது என்பதை முடிவு செய்ய நேற்று இரு நீதிபதிகள் அமர்வு மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து, இனி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த முறை விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், கைது செய்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. கைது நடவடிக்கை தவறானது என்றும் ஏற்கனவே 15 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் காவலில் எடுக்க முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும்? கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ய முடியுமா? சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும், காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும். அதுவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். அந்நியச்செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அதிகாரம் இருந்தாலும் அவரை காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது” என வாதிட்டார்.

சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்வதை போல, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. ஆதாரங்களை திரட்டிய பிறகுதான் கைது செய்ய முடியும். புகார்தாரர் அளித்த விவரங்களையே, ஆதாரங்களாக முன்வைத்து விட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ளது? தேவைப்பட்டால் சிறைக்கு சென்று குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத்துறை காவல் கோருவது முறையாகாது. சட்டத்தில் இல்லாததை அமலாக்கத் துறையினர் கோர முடியாது. வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கவும் முடியாது’ என வாதிட்டார்.

கபில் சிபல் முன்வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், வாதங்களை நாளைக்குள் நிறைவு செய்யும்படி உத்தரவிட்டு இன்றைய தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது. அதன்படி, இன்று பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் காரசாரமாக வாதங்களை முன்வைத்தார். ஆகஸ்ட் 1ல் மீண்டும் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். ஆனால், அவ்வாறு இருந்தால் அது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என கபில் சிபல் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் 1 மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal