கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, அதற்கு பதிலாக ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்துகிறார். இன்று, மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர், அவர்கள் போராடுவார்கள், தொடருவார்கள்… இதன் பொருள் நீங்கள் பாராளுமன்றத்தில் பேச விரும்பவில்லை – ஜனநாயகத்தின் கோவில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும் போது ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்த விரும்புகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.