ஆகஸ்ட் 1&ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது ஓ.பி.எஸ். அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கு தொடர்பாக நடக்கும் ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் கொள்ளை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் கசிகிறது.
என்ன காரணம்? என்பது பற்றி ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், ஓ.பி.எஸ். அணிக்கு மீடியாக்கள் மூலம் பலம் சேர்ப்பவரே மருது அழகுராஜ்தான். இவருடைய எழுத்துக்களையும், கவிதைகளையும் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவே ரசித்து படிப்பவர். தேர்தல் பிரச்சாரங்களில் ஜெயலலிதா பேசிய சில ‘குட்டி கதை’களின் சொந்தக்காரர் மருது அழகுராஜதான். ஓ.பி.எஸ். அணியில் மீடியாவின் லைம்லைட்டில் மருது அழகுராஜ் இருப்பது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட நால்வருக்கு பிடிக்கவில்லை.
இதனால் மருது அழகுராஜை ஓரங்கட்டும் வேலையில் நால்வர் இறங்கியிருக்கிறார்கள். திருச்சியில் நடந்த மாநாட்டில்¢ மருது அழகுராஜின் பேச்சை கேட்க ஏராளமானவர்கள் காத்திருந்தனர்-. ஆனால், இவர் பேசுவதை திட்டமிட்ட இந்த நால்வர் தடுத்துவிட்டனர். இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1ம் தேதி கொடநாடு விவகாரம் தொடர்பாக நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டரிலும் திட்டமிட்டே மருது அழகுராஜ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இதையும் மீறி நீலகிரி மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் மருது அழகுராஜ் படம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆறுமணி நேரத்திற்கும் அதிகமாக விசாரிக்கப்பட்டவரே மருது அழகுராஜ்தான். கொடநாடு விவகாரத்தில் சில முக்கியமான தகவல்களை விசாரணை ஆணையத்தில் சொன்னவரும் மருது அழகுராஜ்தான்! ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தில் சந்தேகங்களை கிளப்பி வருபவரும் மருது அழகுராஜ்தான்.ஆனால், மருது அழகுராஜை திட்டமிட்டே இந்த நால்வர் புறக்கணிப்பது சரியல்ல! இந்த நால்வருக்கும் எப்படி பேசுவதென்று கூட தெரியவில்லை!
அதே போல், மீடியாக்களில் எடப்பாடிக்கு எதிராகவும், ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாகவும் பேசி வருபவர் பெங்களூரு புகழேந்தி! இவரையும் இந்த நால்வர் அணி தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வருகிறது. இதனால்தான், மருது அழகுராஜும், பெங்களூரு புகழேந்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரம் முழுவதும் ஓ.பி.எஸ்.ஸுக்கு தெரிந்தும், இவர்களிடம் கேட்க தயக்கப்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே, இவர்கள் ஓ.பி.எஸ்.ஸை தவறாக வழி நடத்தியதால்தான், இன்றைக்கு இந்த நிலைமைக்கு ஓ.பி.எஸ். தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நால்வரும் எந்நேரமும் எடப்பாடியை சந்தித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றார் வருத்தத்துடன்.
நெருப்பில்லாமல் புகையுமா..? நால்வருக்கு ஓ.பி.எஸ். கடிவாளம் போடாவிட்டால் இழப்பு ஓ.பி.எஸ். அணிக்குதான்!