அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய இருவருக்குமான ஆடிட்டரிடம் அமலாக்கத்துறை இந்த வாரத்தில் விசாரணை நடத்தவிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் இந்தோனேசியா மற்றும் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ள விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பொன்முடியும், சிகாமணியும் சில பதில்களை தெரிவித்திருக்கிறார்கள்.
அதனை ஆடிட்டரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. ஆடிட்டரின் பதில், இவர்களின் பதில்களோடு தான் ஒத்து போகும். ஆனால், அமலாக்கத்துறையிடமிருக்கும் சில ஆவண ஆதாரங்கங்களில் உள்ள விபரங்களோடு இவர்களின் பதில்களும் விளக்கங்களும் முரண்பட்டால், முதலில் சிகாமணியை கைது செய்ய தீர்மானித்திருக்கிறார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டது தவறு அல்ல என்று நிரூபிக்க பொன்முடியிடமோ, சிகாமணியிடமோ, ஆடிட்டரிடமோ எந்த ஆவண ஆதாரமும் இல்லை என்பதால் கைது நடவடிக்கையில் இருந்து இவர்கள் தப்பிக்க முடியாது என்கிறார்கள். சிகாமணி எம்.பி.யாக இருப்பதால் அவரை கைது செய்கிற முடிவை எடுக்கும் சமயத்தில், கைது செய்வதற்கு முன்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
காரணம், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதி கைது செய்யப்பட்டாலும் செந்தில்பாலாஜி விவகாரத்தில் நடந்தது போல நடந்துவிடக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு மத்திய நிதியமைச்சகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.
சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதில் அமைச்சராக அப்போது இருந்த பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் ரெய்டு முடிந்ததும் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக மொத்தம் 7 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை செய்துள்ளது. விடாமல் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்பின் பொன்முடி மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இந்த முறை அவரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டது.
ஆம். – இல்லை என்று பதில் அளிக்கும் விதமாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 6 மணி நேரம் இதற்காக விசாரணை நடந்தது. 10 மணி வரை விசாரணை நடந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையின் இரண்டாம் கட்ட விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வெளியேறும் போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள். ‘‘ நீங்கள் கைது செய்யப்படவில்லை. இரண்டு நாட்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். இதே ஒத்துழைப்பு எங்களுக்கு தரப்பட வேண்டும். உங்களை விசாரணைக்கு மீண்டும் அழைப்போம். இதற்காக சம்மன் கொடுப்போம். அந்த சம்மனை வாங்கியவுடன் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும், விசாரணையை தட்டி கழித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்று அமலாக்கத்துறை கூறியிருக்கிறது’’ என்றனர்.
எனவே, ஆடிட்டரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.