அ.தி.மு.க. நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து தீர்மானக் குழு ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசித்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின், பொன்னையன், செம்மலை, தம்பிதுறை, பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் 2 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் தி.மு.க.வினருக்கே வழங்கப்படுகிறது.

1000 ரூபாய் வழங்க ஆயிரதெட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். தி.மு.க. அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்குதான் தருகிறார்கள். தன்னார்வலர்கள் மூலம் படிவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் விண்ணப்ப படிவம் வழங்குகின்றனர். தகுதியுடையவர்களுக்கு வழங்குவது இல்லை. தி.மு.க. பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் கொடுக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பாராளு மன்ற தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal