இன்றைய தினம் (ஜூலை 21) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான நாள். ஏனெனில் இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனை திமுக தரப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை மூலம் டெல்லி டார்கெட் செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமானதாக இருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் முக்கியமான நபர். ஏனெனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததில் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான பங்குண்டு. இவரது வியூகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பு ஆட்டம் கண்டது.

இப்படியே விட்டால் வரும் 2024 மக்களவை தேர்தலில் சறுக்கலை சந்திக்கும் என்று கணக்கு போட்ட டெல்லி தரப்பு, ரெய்டு அஸ்திரங்களை ஏவி விட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. முதலில் செந்தில் பாலாஜி, அடுத்த பொன்முடி, பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தீயாய் தகித்து கொண்டிருப்பது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தான். ஏனெனில் புழல் சிறையில் இருக்கிறார். பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில வாரங்கள் ஓய்வெடுத்தார். அதன்பிறகு வீடு திரும்பிவிடலாம் என கணக்கு போட்டிருந்த செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத்துறை கிடுக்குப்பிடியால் புழல் சிறைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது.

தற்போது ஏ கிளாஸ் வசதிகள் உடன் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார். இவரை எப்படியாவது விடுவித்து விட வேண்டும் என்று மனைவி மேகலா தீவிரம் காட்டி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து செந்தில் பாலாஜியை விடுவித்து விட முயற்சித்தார்.

ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு, 3வது நீதிபதி என இழுபறியாக சென்று கடைசியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி முன்கூட்டியே கணித்த அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்தது.

அதாவது, தங்கள் தரப்பை கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. இங்கே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுமா? இல்லை மீண்டும் பின்னடைவா? அமலாக்கத்துறை கை ஓங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal