பிரதமர் நரேந்திர மோடியை நாளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், திமுகவும் உறுதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம். இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.