திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2002-&2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “ சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவரை விசாரணைக்கும் அமலாக்கத்துறை அழைத்திருந்தது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
இதற்கிடையே, இன்றைய தினம் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஏற்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை. தற்போது சென்னையில் இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.