அமலாக்கத்துறை வளையத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அமைச்சர் பொன்முடி, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை நேரில் சந்திப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றிருக்கின்றனர். அதேபோல் திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ உட்பட வழக்கறிஞர்கள் டீமும் பொன்முடி இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது.

அமலக்காத்துறையின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி என்.ஆர். இளங்கோ விளக்கிக் கூறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நேற்றிலிருந்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதிகாரிகள் தன்னிடம் நடந்துகொண்ட விதங்கள் குறித்தெல்லாம் சக அமைச்சர்களிடம் பொன்முடி கூறியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ள அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்கள் அவரது சைதாப்பேட்டை இல்லத்தில் குவிய ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலினும் அலைபேசி மூலம் அமைச்சர் பொன்முடியை தொடர்பு கொண்டு பேசி தைரியம் அளித்திருக்கிறார்.

தமிழக அமைச்சரவையில் இதுவரை 4 பேர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில் அந்த லிஸ்டில் செந்தில்பாலாஜியுடன் பொன்முடியும் புதிதாக இணைந்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal