சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அதேசமயம் அவரது நீதிமன்றக் காவல் வரும் 26ம் தேதி நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். பின்னர் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்தது மற்றும் நீதிமன்றக் காவல் ஆகியவை சட்டப்பூர்வமானது என்றும் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உடனடியாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal