மேட்ரிமோனியல் தளத்தில் உள்ள பெண்களை குறிவைத்து கவர்ச்சிகரமாக பேசியே 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெங்களூரு மகேஷ் வழக்கை விசாரித்து வரும் மைசூர் போலீசுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு மகேஷ் 15 பெண்களை ஏமாற்றியதுடன் புதிதாக 9 பெண்களுடன் காதல் லீலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது இன்னும் 9 பெண்கள் மகேஷை திருமணம் செய்ய தயாராக இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கேட்டு வழக்கை விசாரித்து வரும் மைசூரைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதா ஆடிப்போயிருக்கிறார். 90களில் பிறந்தவர்கள் இன்னமும் பலர் திருமணம் ஆகாமல் வாழ்க்கையை கடத்தி வரும் நிலையில் இந்த 80ஸ் கிட்ஸ் செய்தவேலையை கேட்டால் கொதித்து போய் விடுவீர்கள்.

ஓட்டை ஆங்கிலம், கொஞ்சம் ஸ்மார்ட்டான உடைகள், வாய் நிறைய பொய் இவற்றை வைத்து நிறைய பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார் பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த மகேஷ் (45). ‘நான் அவன் இல்லை’ பாணியில் 15 பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் ஜாலியாக வாழ்ந்துவிட்டு பின்னர் அவர்களின் பணம், நகைகளுடன் எஸ்கேப் ஆவது தான் மகேஷ் கேபி நாயக்கின் வேலை. 2014 முதல் 2023 வரை சுமார் 15 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார்.

கடைசியாக இந்த ஆண்டு மைசூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மகேஷ் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் அவரை துமருவில் கைது செய்த மைசூருவிற்கு அழைத்து வந்தனர். அப்போது தான் மகேசின் குட்டு வெளியே வந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த மகேஷ் கேபி நாயக், 5ம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ரியலாகவே நடிக்க தொடங்கினார். பெண்களை ஏமாற்றி சம்பாதித்து சுகபோகமாக வாழ விரும்பினார். அதற்கு திருமணம் செய்வது போல் நடித்து ஏமாற்றுவதை தொழிலாக வைத்துள்ளார். நடிப்பில் காதல் மன்னன்கள் எல்லாம் இவரிடம் தோற்றுப்போய் விடுவார்களாம். அந்த அளவிற்கு பெண்களின் வசீகரிக்க பேசியுள்ளார். பெண்களை நம்ப வைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

அறைகுறையாக ஆங்கிலம் பேசக்கூடியவரான மகேஷ்க்கு, மேட்ரிமோனியல் தளத்தில் விளம்பரம் கொடுத்துள்ள வசதியான 35 வயது அல்லது அதற்கு மேல் வயதுள்ள பெண்கள் தான் இலக்கு. அவர்கள் எந்த மாதிரியான மாப்பிள்ளை தனக்கு வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற வகையில் தன்னை டாக்டர் ஆகவும். என்ஜீனியர் ஆகவும், சாப்ட்வேர் இன்ஜீனியர் ஆகவும் காண்பித்துள்ளார்.

இவரது உடை, பேச்சு, முக தோரணையால் பெண்களை வசீகரித்துள்ளார். இனிக்க இனிக்க பேசி, அதேநேரம் காதல் மொழியில் பிஎச்டி பட்டம் பெற்றவர் போல் நடந்து கொண்டதால் எந்த பெண்ணும் இவரை சந்தேகப்படவில்லை. 2014ம் ஆண்டு முதல் முறையாக ஏமாற்றி உள்ளார். அது நன்றாக இருக்கவும் தொடர்ந்து அதே பாணியில் மேட்ரிமோனியல் தளத்தில் பல பெண்களை வலை விரித்து திருமணம் செய்து அவர்களுடன் கொஞ்ச நாள் ஜாலியாக இருந்துவிட்டு, பின்னர் அவர்களிடம் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தை சொல்லி பணம் மற்றும் நகையுடன் கம்பி நீட்டி வந்துள்ளார்.

இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் தான் டாக்டர் என்று சொல்லி ஏமாற்றிய பெண்களிடம் டாக்டர் போல் நடிக்க போலியாக கிளினிக் வைத்து நர்ஸ்சுகளை வேலைக்கு வைத்து செட்டப் எல்லாம் செய்திருக்கிறார். துமகுருவில் இப்படி செட்டப் செய்து ஒரு பெண்ணை கச்சிதமாக ஏமாற்றி ஜாலியாக இருந்துவிட்டு, அந்த பெண்ணுக்கு கடைசியில் விபூதி அடித்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் மகேஷை திருமணம் செய்த பெரும்பாலான பெண்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள்.

மேலும் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். மகேஷின் வருமானத்தை நம்பி அவர்கள் இல்லை. வெளியில் சொன்னால் அவமானம் என்று எண்ணி அவர்கள் கூறவும். அப்படியே விட்டுவிட்டார்கள். இதுதான் மகேஷ்க்கு வசதியாக போய்விட்டது. அடுத்தடுத்து 15 பெண்களை ஏமாற்றிய மகேஷ் நாயக், கடைசியாக மைசூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஆகஸ்ட் 2022ல் சந்தித்துள்ளார். தான் மைசூரில் டாக்டராக (எலும்பியல் நிபுணர்) இருப்பதாக கூறியுள்ளார். ஜனவரி மாதம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் வைத்து திருமணம் செய்துள்ளார். தன்னுடைய புதிய மனைவியான மைசூர் பெண்ணிடம் கிளினிக் அமைக்க பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

ஆனால் பணம் தரவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் பணத்தை தராததால் நகை மற்றும் பணத்தை (15லட்சம்இருக்கும்) எடுத்துக் கொண்டு மகேஷ் தப்பி சென்றுள்ளார். இதைடுத்து மகேஷ் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவள் பலமுறை முயற்சித்தும் லைக் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு பெண் போனை எடுத்துள்ளார். தான் மகேஷ் நாயக்கின் மனைவி என்று கூறி அதிரவைத்துள்ளார்.

அதன்பின்னரே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் துமகுருவில் இருந்த மகேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். மகேஷ் நாயக்கை திருமணம் செய்து கொண்ட 15 பெண்களில், மூன்று மனைவிகளுக்கு மட்டும் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்த மூன்று பெண்களிடம் இருந்து மட்டும் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆட்டையை போடுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி இந்த வழக்கை விசாரித்து எஸ்ஐ ராதா கூறுகையில், ‘‘மகேஷ் நாயக்கை இரண்டு பெண்களை திருமணம் செய்த புகாரில் தான் முதலில் விசாரித்தோம். போலீசார் அவரை அழைக்க முயன்றபோதும் அவர் போனை எடுக்கவில்லை.அவரது மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணித்தோம், அவர் துமகுருவுக்கு அருகில் இருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தோம். அவரது கால் ஹிஸ்ட்ரியை பார்த்தபோது, அனைத்து அழைப்புகளும் பெண்களிடம் இருந்து வந்தது தெரியவந்தது. சரி எதுக்குமா மகேஷ்க்கு கால் பண்ணிங்க என்று நாங்கள் பெண்களை அழைத்து பேசினோம்.. அப்போது அவர்கள் மகேஷ் நாயக்கை நாங்கள் திருமணம் செய்துள்ளோம் எனறு கூறினார்கள்.

நாங்கள் மகேஷ் நாயக்கின் மேட்ரிமோனியல் புரொபைலை பார்த்தோம். அவரைத் திருமணம் செய்யத் தயாராக இருந்த மேலும் ஒன்பது பெண்களுடன் அவர் காதல் மொழி பேசியதை கண்டுபிடித்தோம். அப்போதுதான் மிகப்பெரிய மோசடிக்காரர் என்பது தெரியவந்தது. மகேஷ் நாயக் தனது குடும்பத்துடன் சுமூகமான உறவில் இல்லை. இவர் மீது 2013ல் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஆதாரம் கிடைக்கவில்லை. அதன்பிறகு தலைமறைவானவர் மீது எந்த புகாரும் அதன்பிறகு வரவில்லை. 10 வருடம் கழித்து இப்போதுதான் புகார்கள் வந்துள்ளன. இவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது.

இதனால் பல பெண்கள் மேட்ரிமோனியல் தளத்தில் நிராகரித்துள்ளனர். ஒருவேளை இவருக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக பேசத்தெரிந்திருந்தால் புகார் கூறிய பெண்களின் எண்ணிக்கை இன்னும் பெரிய அளவில் அதிகமாக இருக்கு என்றார்.

தனது கல்யாணங்களுக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களாக காட்டிக் கொள்ள ரூ 3,000-10,000 வரை கொடுத்து ஆட்களை நடிக்கவும் வைத்திருக்கிறார் மகேஷ். பெண்களிடம் இருந்து அபேஷ் செய்த பணத்தை பல விஷயங்களில் முதலீடு செய்துள்ளார்.அவர் தனது பெயரில் டிப்பர் லாரி, மண் அள்ளும் இயந்திரம் உள்பட பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்’’ என்று எஸ்ஐ ராதா கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal