கலைஞரின் பேனா முனை கவுண்டர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்காவிட்டால் அண்ணாமலை ஐ.பி.எஸ். படித்து இருக்க முடியாது. ஆடுதான் மேய்த்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்து இருப்பார் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆ.ராசாவுக்கு கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது என்பதை ராசாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொங்கு பகுதிக்கு தி.மு.க. செய்தது என்னவென்றால், 1970-ம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கக்கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதுதான்.

கடும் உழைப்புக்கு பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்துக்காவது தனது கட்சி தலைவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆ.ராசா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட தி.மு.க.வினர், இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால் கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal