நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 14 கட்சிகள் கலந்து கொண்டன. இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை கூட்டி, தங்களது பலத்தை காண்பிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதனால் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டுகிறது. இதற்கான 30 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டம் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடியுடன் கலந்து கொள்ள இருக்கிறார். பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே 24 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. தற்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பீகாரில் இருந்து நான்கு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) சார்பில் சிராக் பஸ்வான், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில் ஜித்தன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி சார்பில் உபேந்திரா சிங் குஷ்வாகா, விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் முகேஷ் சஹானி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

உத்தர பிரதேசத்தில் இருந்து சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஓம் பிரகாஷ் ராஜ்பார், முன்னதாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தாராசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. தெலுங்குதேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, பாதல் குடும்பத்தின் ஷிரோமணி அகாலி தளம் பா.ஜனதா உடன் நெருக்கமாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தனியாக போட்டியிடும் வாய்ப்புள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பா.ஜனதா பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 24 கட்சிகள் உள்ளன. பா.ஜனதா, அதிமுக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசிய மக்கள் கட்சி (NPP), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NPPP), சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (SKM), ஜனநாயக் ஜந்தா கட்சி (JJP), இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (IMKMK), ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கள் யூனியன் (All Jharkhand Students Union), இந்திய குடியரசு கட்சி (RPI), மிசோ தேசிய முன்னணி (MNF), தமிழ் மாநில காங்கிரஸ் (TMC), ஐ.பி.எஃப்.டி. (திரிபுரா), போடோ மக்கள் கட்சி (BPP), பாட்டாளி மக்கள் கட்சி (PMK), மகாரஸ்த்ரவாடி கோமந்தாக் கட்சி (Mahasthravadi Gomantak Party), அப்னா தல், அசாம் கன பரிசத் (AGP), ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி, நிஷாத் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி (எல்) (UPPL), அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரி (AIRNC), ஷிரோமணி அகாலி தளம் சயுங்க்த் (தின்ட்சா), ஜனசேனா (பவன் கல்யாண்).

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஷ்தானி அவாம் மோர்ச்சா), ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி, விகாஷீல் இன்சான் சாட்கி, ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சி புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போகிறது. இந்த கூட்டம் டெல்லி அசோக் ஓட்டலில் நாளை மாலை நடைபெற இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal