தமிழக காங்கிரசுக்கு தற்போது 76 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் இறந்துவிட்டார். இது தவிர தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட தலைவர் பதவிகளும் காலியாக உள்ளன. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகத்துக்கும், பிரசாரத்துக்கும் வசதியாகவும் மேலும் சிலருக்கு பதவிகள் வழங்கும் வகையிலும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில் கூடுதலாக மாவட்டங்களை உருவாக்க மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே திட்டமிட்டு ஒரு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிடம் வழங்கி உள்ளார்கள்.
கோஷ்டி தலைவர்கள் சிலர் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் கால தாமதம் ஆகி வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள பகுதிகளை சீரமைத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் பணிக்காக பூத்கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது, பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, வாக்குச் சாவடி குழுவுக்கும், மாநில தலைமைக்கும் இடையே தகவல் தொடர்புகளை உறுதிபடுத்துதல் பற்றியும் விவாதித்தனர்.