மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மகளிர் உரிமை தொகை வழங்குவதில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் உதவித்தொகை முழுமையாக கிடைக்க வேண்டும். அதன்படி பயனாளர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும். மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடியின்போது போதிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி குறைந்தது. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

தமிழக அரசு நேரடியாக தலையிட்டு தக்காளியை கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். மேலும் பொதுமக்களுக்கும், சரியான விலையில் தக்காளி கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும். ஆகவே விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal