பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மில்லி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார்.
90 மில்லி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழக அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்? மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.