தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தடுப்பது, கொலை-கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது, சொத்து தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். எந்த அளவுக்கு குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை கண்டறியவும் உத்தரவிடப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க அறிவுரைகளை வழங்கி விரிவாக பேசினார்.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசாருக்கு இருக்கும் பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபட என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்தனர். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal