எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அல்வாவும் ‘மேலிடம்’ கொடுத்த விவகாரம்தான், ஓ.பி.எஸ். தரப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றி பெறமுடியாமல் தோல்வியானது கிடைத்தது. இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக- பாஜகவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூட்டணியை மறு பரிசீலனை செய்யவும் தயார் என அதிமுக தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் டெல்லியில் வரும் 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் சார்பாக கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு போட்டியாக பாஜக சார்பாக தங்கள் அணியின் பலத்தை காட்டும் வகையில் கூட்டமானது நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு பங்கேற்பதாக அறிவித்துள்ளார். அதே போல ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லையென கூறிவிட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அதிமுகவிற்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எனவே இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இபிஎஸக்கு கால் வலி இருப்பதால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே அதிமுக சார்பாக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக தலைமை அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஸ் கூறுகையில் பாஜகவில் இருந்து எந்த வித அழைப்பும் வர வில்லையென தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமியாவது அவ்வப்போது ‘மேலிடத்திற்கு’ எதிராக பேசி வருகிறார். ஓ.பி.எஸ். டீம் மேலிடத்தைப் பற்றி விமர்சிக்கவே தயங்குகிறது. வலிய சென்று ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். ஆதரவில் போட்டியிடும் ஒரு சில வேட்பாளர்கள் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது.

ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் எடப்பாடி பின்னால் சென்றுவிட்டதால், இனி ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவால் அ.தி.மு.க.வை ஒன்று செய்ய முடியாது என நினைத்த மேலிடம், ஓ-பிஎஸ்ஸுக்கு அழைப்பு கொடுக்கவில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal