கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.

கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.

கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது. கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.


இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது. எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal