வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் மாஜிக்களை குறி வைத்து ஸ்டாலின் காய்நகர்த்த இருக்கிறார்.
இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அதைத் தொடர்ந்து அவரது கைது, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து தூக்க துடிக்கும் ஆளுநர் என அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் திமுகவுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் பெரியளவில் விமர்சனம் இல்லாத நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் போது திமுகவை மையமாக கொண்டு ஊழல் புகார்கள் எழுந்தால் அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் அதிரடி ஆக்ஷனில் இறங்க உள்ளராம் முதல்வர் ஸ்டாலின்.
உட்கட்சிப் பிரச்சினை, கூட்டணிக் கட்சியான பாஜகவோடு உரசல் என இரு ஆண்டுகளாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அதிமுக, தற்போது திமுக மீது விமர்சனங்கள் அதிகரிக்கத்திருப்பதை தனக்கு சாதகமாக பார்க்கிறது. ஏற்கனவே பிடிஆர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆடியோ வெளிவந்த போது அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘30 ஆயிரம் கோடி ரூபாய்’ சம்பாதித்துள்ளனர் என்பதை எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கினார்.
அதேபோல் செந்தில் பாலாஜி விவகாரத்தை கையில் எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என காய் நகர்த்தி வருகிறார்கள். செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறிய அதிமுக தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனாலே ஆளுநரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் தகவல் கிடைக்கவில்லை என காரணம் சொல்லி வருகிறது என்கிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அடுத்த ஓரிரு மாதங்களில் மாஜி அமைச்சர் ஒருவரையாவது கைது செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போதுவது போல் அதிமுக மாஜிக்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளிப்பதிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்த வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற முயன்றால் நீதிமன்றத்தை நாடவும் முதல்வர் தரப்பு முடிவு செய்திருக்கிறது’’ என்கிறார்கள்.