துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் குறித்து எஃப்.ஐ.ஆரில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்…

சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருந்தார். அப்போதுதான் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி மேற்கு மண்டல காவல் துறை துணை தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றார்.

இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பல் மருத்துவர். இவர்களுக்கு ஒரே மகள் உள்ளார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு தற்போது மருத்துவம் பயில முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமார் நேற்று கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. விஜயகுமாரின் பிஎஸ்ஓ அதாவது பாதுகாப்பு காவலர் ரவிச்சந்திரன் அளித்த தகவலின் படி முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘ஜனவரி மாதம் முதல் நான் விஜயகுமாருடன் பணியாற்றி வந்தேன். அப்போது முதலே அவருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக அவர் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வார். டிஐஜி விஜயகுமார் நேற்று முன் தினம் குடும்பத்துடன் வெளியே போய்விட்டு வந்தார். கோவை முகாம் அலுவலகத்தில் உள்ள டிஎஸ்ஆர் அறைக்கு காலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு டிஎஸ்ஆரை பார்த்துவிட்டு காலை 6.40 காவலர் ரவி வர்மாவிடம் கேட்டு பால் வாங்கி குடித்தார்.

பிஸ்டல்களை வைக்கும் அறைக்கு வந்த அவர் அங்கிருருந்த 183 எனும் 9 எம்எம் ரக துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என கேட்டறிந்தார். நான் டீசர்ட் போட்டுக் கொண்டு வருவதற்குள் துப்பாக்கி சப்தம் கேட்டது. உடனே ஓடி சென்று பார்த்த போது கோவை டிஐஜி மல்லாந்த நிலையில் ரத்தக்காயத்துடன் இருந்தார்.

உடனே மேலே இருந்த அவரது தாய்க்கும் தகவல் அளித்துவிட்டு அனைவரும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு காலை 7 மணிக்கு அழைத்து சென்றோம். செல்லும் வழியிலேயே உயரதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்துவிட்டோம். மருத்துவமனையில் விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிஐஜி தினந்தோறும் காலை 7 மணிக்கு முகாம் அலுவலகத்தில் உள்ள டிஎஸ்ஆரை பார்க்க வருவார். ஆனால் நேற்றைய தினம் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 6.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். இவர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கும் சிகிச்சை பெற்று வந்தார் என தெரிகிறது. கடந்த 10 நாட்களாக அவருக்கு மன அழுத்தம் அதிகரித்ததால் சென்னையில் வசித்து வந்த விஜயகுமாரின் மனைவி, மகள் ஆகியோர் கோவைக்கு வந்து அவருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த விஜயகுமார் மிகவும் நேர்மையான அதிகாரி, பாலியல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்தவர். இவரது சம்பவத்தை வைத்துதான் நடிகர் விஜய்யின் ‘தெறி’ படமே எடுக்கப்பட்டது என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal