செந்தில் பாலாஜி வழக்கு வருகிற 11 மற்றும் 12 ந்தேதி ஆகிய இரு தினங்கள் நடக்க இருப்பதாக மூன்றாவது நீதிபதி அறிவித்திருக்கிறார்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட இருப்பதால் 11-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி கார்த்திகேயன், இரு நீதிபதிகளும் எந்த கருத்தில் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்யும்படி இருதரப்புக்கும் அறிவுறுத்தினார்.

இதற்காக வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்த நீதிபதி, ஜூலை 8-ந் தேதி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெறும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் நீதிபதி, செந்தில் பாலாஜி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை ஆவணங்களை (கேஸ் டைரியை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது. அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்புக்கு அறிவுறுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தனர். செந்தில் பாலாஜி தரப்பில், மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருந்தாலும் இரு நீதிபதிகளுமே விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும் என 3-வது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்தார். மேலும் ஜூலை 11-ந் தேதி செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை சார்பாக ஜூலை 12-ல் துஷார் மேத்தா தமது வாதங்களை முன்வைக்க உள்ளனர். இவ்வழக்கில், செந்தில் பாலாஜியின் சிகிச்சை காலத்தை விசாரணை காலமாக கருத முடியுமா? முடியாதா? என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் 3-வது நீதிபதி கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal