இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி பிரதமர் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறின.

ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ராகுல்காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, அதன் ராகுல் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் ராகுல் காந்திக்கு எதிராக சுமார் 8 கிரிமினல் அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் எந்த தலையீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் “ இந்த வழக்கு மட்டுமல்லாமல் ராகுல்காந்தி மீது வீர் சாவர்க்கரின் பேரன் ஒருவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, எந்த வகையிலும் எந்த அநீதியையும் ஏற்படுத்தாது,” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தீர்ப்பு ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal