தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த தகவல்தான் ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் படாத பாடுபட்ட சமந்தா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்த பின்னரே அதில் இருந்து படிப்படியாக மீண்டார். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் சமந்தா.
அவர் நடிப்பில் தற்போது குஷி என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் குஷி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலி மேன்2 வெப் தொடரை இயக்கியவர்கள் ஆவர். இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தா குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சிட்டாடெல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவு தற்காலிகமானது தானாம். இதனால் தற்போது படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ள சமந்தா, வரும் வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம். சுமார் ஓராண்டு காலத்துக்கு அவர் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்த ஓராண்டு காலத்தில் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து முழுமையாக உடல் நலன் தேறிய பின்னரே மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஐடியாவில் சமந்தா உள்ளாராம்.