தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் விட்ட இடத்தை, நடிகர் விஜய் பிடித்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில்தான் விஜய் தனது ‘அரசியல் பணி’யை தீவிரப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி நிர்வாகிகளிடமும் தொகுதி பற்றிய முழுவிபரங்களை கேட்டுள்ளார். அதோடு தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வெற்றி பெற்ற கட்சியின் பெயர் உள்பட பல்வேறு விபரங்களை விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மூலம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே தான் முதல் முறையாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் இன்று சந்தித்து அவர்களை பாராட்டி, உதவித்தொகை வழங்கினார். மேலும் அங்கு அவர் ஓட்டுரிமை குறித்து பேசியதும், தேர்தலில் தலைவர்கள் தேர்வு குறித்தும் பேசியதும் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளன.
இதனால் தற்போது அனைத்து அரசியல்வாதிகளிடமும் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‘‘நடிகர் விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார்’’ என கேள்வி கேட்டார். அதற்கு சிரித்தபடி உதயநிதி ஸ்டாலின், ‘‘வருக… வருக… வரவேற்பேன்’’ என்றார். இதையடுத்து ‘‘விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு போட்டியாக இருக்கும்?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்பே«து ‘முகம் மாறிய’ உதயநிதி அதன்பிறகு சிரித்தபடி ‘‘முதல்ல வரட்டும். வந்த பின் பேசலாமுங்க’’ என கூறிவிட்டு சென்றார்.