தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை 200 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் இந்தப் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 28ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த பேரணி ராமேஸ்வரத்தில் இருந்து சிவகங்கை வரை சென்று விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் என்று நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அண்ணாமலை ஒரு நாளில் கிராமப்புறங்களில் இரண்டு தொகுதிகளுக்கும், நகராட்சி பகுதிகளில் நான்கு தொகுதிகளுக்கும் செல்வார்” என்று நாகராஜன் கூறினார்.
தொடர்ந்து பேசிய நாகராஜன், “ஆரம்பத்தில், அண்ணாமலை மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் பாதயாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது பாதயாத்திரைக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக, தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு மாநிலம் முழுவதைதும் பாத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எங்கள் மாநிலத் தலைவருடன் நடைபயணத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இந்தப் பாதயாத்திரைக்கு பொறுப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரனும், துணைப் பொறுப்பாளராக கட்சியின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் இருப்பார்கள் என்றும் அவர்களின் கீழ் 18 குழுக்கள் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் நாகராஜன் கூறினார்.