பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போனை மலைக்கோவிலில் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடிவாரத்திலேயே செல்போன் வைப்பறை தொடங்கப்பட்டு அதில் பக்தர்கள் தங்கள் செல்போனை கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் வழக்கம் போல் செல்போனுடன் மலைக்கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகளையும் வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர். அதனுடன் தங்கள் குடும்பத்தினரையும் இணைத்து வீடியோ வெளியாவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால் இங்குள்ள முருகனை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் கடவுள் வழிபாட்டில் அதன் புனிதத்தை உணராமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் இதனை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தபோதும் அதனை பலர் கடைபிடிப்பதில்லை. இனிமேலாவது கோவில் நிர்வாகம் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத், மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இச்சிலையை காண பல்லாயிரம் கி.மீ. நடை பயணமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேகத்துக்கு முன்பு வரை பழனி மலைக்கோவில் பகுதியில் மூலவர் சிலையை படம் பிடித்தால் செல்போன்கள் பறிக்கப்படும் என பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அதை காண முடியவில்லை. மேலும் கால பூஜை வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு சிலர் ஆர்வத்தால் மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் இதுபோன்று மூலவர் படம் பிடித்தால் அவர்கள் செல்போன் பறிக்கப்பட வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal