த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மேகதாது அணை மற்றும் காவிரி நீர் சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வரின் உறுதியான பேச்சும் செயல்பாடும் தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை த.மா.கா சார்பில் கண்டிக்கிறேன்.
தமிழக தி.மு.க அரசு அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும், அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் கர்நாடகாவில் நடைபெறுவதையும் கவனத்தில் கொண்டு, மேகதாது அணை விவகாரத்தை கண்டும் காணாமல் இருப்பது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு இந்நேரம் கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உடனடி செயல்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.