சேலம் மாநகராட்சியில் தற்போதுதான் இரண்டு கவுன்சிலர்களை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினார் துரைமுருகன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் தி.மு.க. தலைவர் மீதே நம்பிக்கை இல்லை என்று ஏழு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றிய விபரம் வருமாறு… பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் இன்று (28.06.2023)காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் சித்திக் அலி, புஷ்பா சுப்பிரமணியம், சரண்யா சுரேஷ், ஜெயந்தி வாட்டர் நந்தகோபால், சுப்ரீம் சுப்பிரமணியன், பிரபாவதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் பஸ்ரியா பேகம் ஆகிய ஏழு கவுன்சிலர்களும், தலைவர் ஓ.சி.வி ராஜேந்திரன் மீது நம்பிக்கை தன்மை இல்லை என்று கூறினார்கள். மேலும் அவர் இதுவரை செய்த ஊழல்களை கண்டித்தும் சொந்தக் கட்சிக்காரர்களுக்கு மிரட்டல் கொடுக்கும் தொனியில் செய்த செயல்பாட்டை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடுப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம் 13 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிக பெரும்பான்மையாக 7 கவுன்சிலர்கள் இன்று கொண்டு வந்த பொருள் எண் 1 முதல் பொருள் எண் 43 வரை உள்ள அனைத்து தீர்மானத்தையும் நிராகரித்து வெளிநடப்பு செய்தனர். இதனால இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுவரை பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியில் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு 4 மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை. இரண்டு மாதங்கள் கூட்டத்திற்கு தலைவர் ஓ.சி.வி ராஜேந்திரன் அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் நிர்வாகம் முற்றிலும் முடங்கி போய் மக்கள் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் ஓ சி வி ராஜேந்திரன் அவர்களின் செயல்பாடு மற்றும் ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை மற்றும் அதிருப்தியின் காரணமாக இதுவரை நடந்த கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர்.
இது பற்றி ஈரோடு உ.பி.க்களிடம் பேசியபோது, ‘‘ஈரோடு மாவட்ட அமைச்சரான முத்துசாமியும் பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். உளவுத்துறையின் மூலம் கட்சி மேலிடத்திற்கு சென்று முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. சுலபமாக வெற்றி பெறும்’’ என்றனர் கோபத்துடன்!