கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது 7 நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி இன்றைய தினம், இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘‘இந்த வழக்குகளில் தங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் தாம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது எனவும் இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘‘பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எட்டு மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர உரிமையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும், அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல’’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.