மாயமான கூட்டாளி கொல்லப்பட்டது அம்பலமாகி, அதுதொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவருடைய மனைவி முருகலட்சுமி.செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையில் தங்கியிருந்தார். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகளை அணிந்து வலம் வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக செந்தில் குமார் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் செந்தில்குமார் திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி அவருடைய மனைவி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு மதுரை கருப்பாயூரணி பகுதியில் ஊராட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனை அறிந்த வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரிடம் சென்னை சென்று விடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள செந்தில்குமார் மாயமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இதனைதொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு, செந்தில்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டது. செந்தில் குமாரை கண்டுபிடிக்க அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு காருன், அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டு இருந்தார். செந்தில்குமாரை. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், வரிச்சியூர் செல்வத்தையும் கண்காணித்தனர். அப்போதுதான், செந்தில்குமார் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவலும் கிடைத்தது.

சென்னைக்கு செந்தில்குமாரை அனுப்பி வைத்ததாக தகவல் பரவிய நிலையில் வரிச்சியூர் செல்வம்தான், தனது கூட்டாளியான செந்தில்குமாரை ஊருக்கு வரவழைத்து அவரை கொன்று உடலை ஆற்றில் வீசியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று வரிச்சியூர் செல்வத்தை (54) கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பாயூரணி கொலை வழக்கில் தனக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் செந்தில்குமாரை கொலை செய்ததாக போலீசாரிடம் வரிச்சியூர் செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக வரிச்சியூர் செல்வத்தை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்தான் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனைத்தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal