அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முன்பு சில மருந்துகளை எடுத்திருக்கக் கூடாது என்பதால், பைபாஸ் அறுவை சிகிச்சை தாமதமானது. அதன் தொடர்ச்சியாக, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று அதிகாலை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் ஸ்கை வியூ அறையில் செந்தில் பாலாஜிக்கு அதிகாலை 5 மணிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுமார் ஐந்து மணி நேரமாக நடைபெற்ற இதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 நாட்களுக்கு ஐசியூவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.