
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை அதிகாலையில் தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில்தான், அதிகாலையில் கரூரில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றிருக்கிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையின்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் இன்று அதிகாலையில் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஆபரேசன் செய்யும் அறைக்கு மாற்றப்பட்டார். 5 மணியில் இருந்து இதய அடைப்புகளை நீக்குவதற்கான ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசன் முடிந்து செந்திவ் பாலாஜி கண் விழிக்க பல மணி நேரம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டிய அவரது ஆதரவாளர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
கரூர் மத்திய மாநகர கழக சார்பில் இன்று காலையில் கரூரில் உள்ள கல்யாண பசுபதி ஈஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது மத்திய மாநகர பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டு கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கலந்து கொண்டனர்.
