தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி கதறி அழுதார்.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பதா மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆஞ்சியோம்ஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான விவாகரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘கடந்த 2015ல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுநர் நடத்துனர் பணி நியமன விவகாரத்தில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அப்போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்றார்கள். தமிழக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அமலாக்கத்துறையும் தங்கள் விசாரணையை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்கிற போது, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட கைதா? இல்லை கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்களே அப்போது ஏதேனும் சட்டவிரோதப் பணப்பறிமாற்றம் இருந்து அது தொடர்பான வழக்கா? என்பது தெரியவில்லை.

நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளை அழைத்து சோதனை எல்லாம் நடத்தி உள்ளார்கள். எனவே வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதப் பணப்பறிமாற்றம் நடந்ததா என்று கண்டுபிடித்தார்களா என்பதும் தெரியவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது குறித்து தெளிவாக சொன்னால் தான் எந்த வழக்கு என்பது தெரியவரும்.

வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்குத்தான் அழைத்துச் செல்வார்கள். அதன்பிறகு நீண்ட விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து கடைசியாகவே கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

எனவே, அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரிகளின் அடிப்படையில் கைது செய்தார்களா? அதை பற்றி அமலாக்கத்துறை சொன்னால் தான் தெரியவரும். திமுகவை பொறுத்தவரை செந்தில் பாலாஜிக்கு பக்கபலமாகவே இருப்பார்கள். சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள். திமுகவை பொறுத்தவரை செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி வருகிறார். திமுக பலவீனமாக இருப்பதாக சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி பெற வைப்பதற்கான முயற்சியிலும் செந்தில் பாலாஜி இறங்கி உள்ளார். இதேபோல் தேர்தலில் அடிமட்ட அளவில் செந்தில் பாலாஜி இறங்கி வேலை பார்த்த அணுகுமுறை நிச்சயமாக அந்தபகுதியில் உள்ள அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சவாலாக இருந்திருக்கும்.

இப்போது இதுபோல் அவரை பிடிப்பதன் மூலம் அரசியல் வேலைகளில் அவரை முடக்குவதற்கான முயற்சியாக கூட இதை திமுக பார்க்கும். அமைச்சரவையை பொறுத்தவரை முக்கியமான இலாக்காவை செந்தில் பாலாஜி கையில் வைத்திருந்தார். அடுத்தத்து ரெய்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைப்பது மிகவும் கடினமான காரியம். திமுக அரசுக்கும் அரசியல் ரீதியாக சிக்கலாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், அகில இந்திய அளவில் தலைவர்கள் கண்டிக்கிறார்கள். அதேநேரம் புதிய அமைச்சரவை செந்தில் பாலாஜிக்கு பதிலாக வேறு ஒருவரை போட வேண்டியதுவந்தாலும் வரலாம். ஜாமீனில் வெளிவருவது மிகவும் கடினம். மகாராஷ்டிராவில் நவாப் மாலிக்கும், விஜய் ராவத்தும் 100 நாளில் வந்தார்கள் என்று நினைக்கிறேன். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்னமுமே ஜாமீனில் வரமுடியாமல் உள்ளேயே இருக்கிறார். பாஜக அதிமுக இரண்டுக்கும் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலுமே, திமுக ஊழல் கட்சி, செந்தில் பாலாஜி ஊழல் செய்திருக்கார் என்று பிரச்சாரம் செய்ய பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என்று தெரிகிறது.

அதேநேரம் அரசியல் பழிவாங்கல் என்று கூறி திமுக, பாஜகவிற்கு எதிராக வாக்குகளை தன் பக்கம் அதிகம் ஈர்க்கவும் இது உதவ வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal