சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நிலை குறித்து கேட்டறித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். பின்னர், விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.
நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 10.25 மணிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா வந்தனர். செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறைக்குள் முதல்வர் சென்று உடல் நிலை குறித்து கேட்டறித்தார். முதல்வரின் வருகையால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது.