கலைஞர் மறைவிற்குப் பிறகு கனிமொழி எம்.பி., தி.மு.க.வில் புறக்கணிக்கப்படுகிறார் என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. கனிமொழியின் ஆதரவாளர்களும் மீடியாக்களிடம் இது தொடர்பான தங்களது குமுறல்களை கொட்டி வந்தன!

ஆனால், சமீப காலமாக தி.மு.க.வில் கனிமொழிக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது, முதல்வர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் அமர்ந்திருந்தார் கனிமொழி எம்.பி.!

இது தொடர்பாக மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘கருணாநிதி இறந்த பிறகு, கனிமொழிக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் குறைந்துவிட்டதாக ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தென்மண்டலத்தை அன்று அழகிரியிடம் நம்பி ஒப்படைத்தார் கருணாநிதி. இன்று அழகிரி கட்சிக்குள் இல்லாத நிலையில், அவரை மீண்டும் சேர்த்து கொள்ள, மேலிடத்துக்கு விருப்பமில்லாத சூழலில், கனிமொழிக்கு தென்மண்டல பொறுப்பை தரலாமே என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கு நடுவில் உதயநிதியின் விஸ்வரூபம் கட்சிக்குள் எழவும், கனிமொழிக்கு வெறும் மகளிர் அணி பொறுப்பை மட்டும் தந்து ஒதுக்குவது சரியா? என்றும் முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின், உங்களில் ஒருவன் சுயசரிதை புத்தக விழாவில், கனிமொழியின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விழாவில் அனைவரையும் வரவேற்று பேசியிருந்தது எம்பி கனிமொழிதான்.

கனிமொழி பேசியபோது, “கொடை, கருணை, நீதி தவறாமை, மக்களை பாதுகாத்தல், இவை நான்கும் உடைய அரசன் வேந்தர்களுக்கு ஒளிபோன்றவன். அப்படி ஒரு தலைவராக, முதலமைச்சராக, தமிழகத்தை முன்னடத்தி கொண்டிருக்கும் அண்ணன் தளபதி அவர்களே” என்று சொல்லிவிட்டு ஸ்டாலினை திரும்பி பார்த்தார் கனிமொழி. அப்போது ஸ்டாலின் முகத்தில் லேசான புன்னகை எட்டிப்பார்த்தது… அவரும் அப்போது கனிமொழியை லேசாக சிரித்து கொண்டே பார்த்தார்.

அதுபோலவே உதயநிதியையும் பாராட்டி பேசி, திமுகவில் நிலவும் அனைத்து யூகங்கள், சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இப்போது மீண்டும் அதுபோலவே ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி, அறிவாலயத்தில் அக்கட்சியின் மகளிரணி சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கனிமொழி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதற்கு காரணத்தையும் கனிமொழி சொல்லியிருந்தார். ‘பெரியார், கலைஞர் கருணாநிதி அடியொற்றி முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பதை சட்டமாக்கி 11 பெண்களை மேயர்களாக்கி, பல பெண்களை நகராட்சி தலைவர்களாக அமர வைத்து சாதனை புரிந்திருத்திருக்கிறார். அதனால், இந்த நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் தலைமையேற்பதுதான் பொருத்தமானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்’ என்று கூறியிருந்தார்.

அதன்படியே அறிவாலயத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, சமூக நலத்துறை – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விழாவில்தான், முதல்வருக்கு நினைவுபரிசு ஒன்றை கனிமொழி வழங்கினார்.

பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பறை இசைக்கருவியை கனிமொழி தன்னுடைய அண்ணனுக்கு பரிசளித்தார். அந்த இசைக்கருவியில் பல துறைகளில் சாதித்த பெண்களின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளது. கலைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர் கனிமொழி.. அதனாலேயே ஆதி தமிழர் இசைகளில் ஒன்றான பறை இசையின் அடையாளமாக வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பறை இசைக்கருவியை ஸ்டாலினுக்கு பரிசாக அளித்துள்ளார். கனிமொழி வழங்கிய பரிசு, ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதுபோலவே விழாவில் பங்கேற்றவர்களுக்கு பறை இசைக்கருவிகளை பரிசாக தந்தார் கனிமொழி..!

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான என தருமை தங்கை கனிமொழி அவர்களே’ என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சும் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது’’ என்றனர்.

தி.மு.க.வில் இனி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழியை வைத்து ‘அரசியல் லாபம்’ பார்க்கும் நபர்களுக்கு சரியான சவுக்கடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal